கேபள்கள் திருடிய நபர் 100 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று பிடிக்கப்பட்டார்

மலாக்கா, மே.06-

கேபள்களைத் திருடிக் கொண்டு, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் எதிர்த்திசையில் சென்ற டோயோட்டா ஹைலக்ஸ் வாகனமோட்டியை ரோந்துப் போலீசார், சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்று பிடித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் மலாக்கா அலோர் காஜாவிற்கு அருகில் நிகழ்ந்தது. 29 வயதுடைய அந்த நபர் எதிர்த்திசையில் வாகனத்தைச் செலுத்தியதில் ஒரு லோரி உட்பட நான்கு வாகனங்களை மோதியுள்ளார்.

எனினும் இதில் யாரும் காயம் அடையவில்லை என்று மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.

அலோர் காஜா டோல் சாவடியின் தானியங்கி தடை கேட்டையும் அந்த நபர் மோதி சேதப்படுத்தியுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஸுல்கைரி கூறினார்.

அந்த நபருடன் இருந்ததாக நம்பப்படும் மேலும் ஒரு நபர் தப்பிச் சென்று விட்டதாக அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS