கோலாலம்பூர், மே.06-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் புலன் விசாரணைக்கு உதவும் வகையில் சாட்சியம் அளிக்கச் சென்ற ஒரு வர்த்தகப் பெண்மணியான 42 வயது டத்தின் ஶ்ரீ பமேலா லிங் மர்மமான முறையில் காணாமல் போனது தொடர்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி காணாமல் போன டத்தின் ஶ்ரீ பமேலா லிங், கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் ஒரு மாத காலம் ஆகியும் அந்தப் பெண்மணியைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்கும்படி, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலாய்வுத் துறைக்குத் தாம் உத்தரவிட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
பமேலா லிங் கடத்தல் தொடர்பில் அவரின் கணவர் உட்பட 16 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக டான் ஶ்ரீ ரஸாருடின் தெரிவித்துள்ளார்.