கோலாலம்பூர், மே.06-
தனியார் கிளினிக்குகளிலும், மருத்துவமனைகளிலும் மருந்துப் பொருட்களின் விலைப் பட்டியலை பொது மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று அரசாங்கத்தின் அமலாக்கத்தை எதிர்த்து ஆட்சேப மறியலில் ஈடுபட்டுள்ள மலேசிய மருத்துவர் சங்கத்தின் கோரிக்கை மனு ஆராயப்படும் என்ற சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
இன்று புத்ராஜெயாவில் பிரதமர் அலுவலகத்தின் முன்புறமும், சுகாதார அமைச்சின் முன் வளாகத்திலும் அமைதி மறியலில் ஈடுபட்டுள்ள தனியார் மருத்துவர்கள் கடந்த மே 1 ஆம் தேதி அமலுக்கு வந்துள்ள, மருந்துப் பொருட்களின் விலைப் பட்டியலை காட்சிக்கு வைக்க வேண்டும் என்ற புதிய விதிமுறைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் அந்த புதிய சட்ட விதி அகற்றப்பட வேண்டும் என்றும், மருந்துப் பொருட்களை பொது மக்களின் பார்வைக்கு வைக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள மலேசிய மருத்துவர் சங்கமான எம்எம்ஏ இன்று தன்னிடம் வழங்கிய மகஜர் குறித்து முடிவு செய்வதற்கு முன்னதாக அதன் உள்ளடக்கம் விரிவாக ஆராயப்படும் என்று டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் குறிப்பிட்டார்.