அலோர் ஸ்டார், மே.06-
Four Wheel Drive ரக வாகனங்களை இலக்காகக் கொண்டு அந்த வாகனங்களைக் கொள்ளையடித்து வந்த மூன்று கொள்ளையர்களைப் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
கடந்த வாரம் வியாழக்கிழமை கெடா, அலோர் ஸ்டார், சிக், தாமான் செஜாத்தெராவில் ஒரு ஹோம் ஸ்டெய் வீட்டில் அந்த மூன்று கொள்ளையர்களும் சுட்டுக் கொல்லப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஸேய்ன் தெரிவித்தார்.
கிடைக்கப் பெற்ற உளவுத் தகவலின் அடிப்படையில் அதிகாலை 2.30 மணியளவில் அந்த ஹோம் ஸ்டெய் வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 35 க்கும் 37 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று கொள்ளைகர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இன்று அலோர் ஸ்டாரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் முகமட் ஷுஹைலி கூறினார்.
முன்னதாக, அந்த மூன்று கொள்ளையர்களும் போலீசாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தினர். போலீசார் பதிலடித் தாக்குதலை நடத்தியதில் மூவரும் சம்வ இடத்திலேயே மாண்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மலாக்கா, சிலாங்கூர், பகாங், பேரா ஆகிய மாநிலங்களில் திருடப்படும் வாகனங்களைக் கடத்தல் கும்பலிடமிருந்து பெற்று நாட்டின் எல்லைப் பகுதி வாயிலாக வெளியேற்றும் செயலில் இந்த கும்பல் ஈடுபட்டு வந்ததாக முகமட் ஷுஹைலி மேலும் கூறினார்.