கோலாலம்பூர், மே.06-
நாட்டில் சட்டவிரோத ஆலயங்கள் என்று தாம் கூறியதை எதிர்த்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்த மோகன் ராஜ் தங்கராஜுவிற்கு எதிராக சட்டத்துறை அலுவலகம் இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று சர்ச்சைக்குரிய சமயப் போதகர் பிஃர்டாவுஸ் வோங் இன்று கேள்வி எழுப்பினார்.
போலீசார் தனது விசாரணையை முடித்துக் கொண்டு, அறிக்கையை உரிய நடவடிக்கைக்காக சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.
ஆனால், தனக்குக் கொலை மிரட்டல் விடுத்த நபர், இன்னமும் சுதந்திரமாக நடமாடிக்கொண்டு இருக்கிறார். கடந்த இரண்டு மாத காலமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்று பிஃர்டாவுஸ் வோங் வினவியுள்ளார்.
இந்த கொலை மிரட்டல் தொடர்பாக எம்சிஎம்சி எனப்படும் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் நடத்திய விசாரணையில் பைப்பேசியில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததை மோகன் ராஜ் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். அப்படியிருந்தும் சட்டத்துறை அலுவலகம் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதித்து வருவது ஏன் என்று பிஃர்டாவுஸ் வோங் ஓர் அறிக்கையின் வாயிலாக வினவியுள்ளார்.