குளுவாங், மே.07-
கடந்த சனிக்கிழமை, ஜோகூர், சிம்பாங் ரெங்காம் அருகில் வடக்கை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஆர் அன்ட் ஆர் ஓய்வுத் தளத்தில் மாது ஒருவரை மடக்கிக் கொள்ளையடித்ததாக நம்பப்படும் மூன்று ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பின்னிரவு 12.30 மணியளவில் நிகழ்ந்த இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாது செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து இந்த மூவரும் பிடிபட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.
19 க்கும் 23 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று பேரும் ஜோகூர் பாருவில் மூன்று வெவ்வேறு இடங்களில் குளுவாங் மாவட்ட போலீஸ் துறையினரால் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பவம் நிகழ்ந்த அன்று அந்த மாதுவை மடக்கிய இந்த மூவரும் 1,200 ரிங்கிட் பெறுமானமுள்ள உடமைகளையும் ரொக்கப் பணத்தையும் கொள்ளையிட்டுள்ளனர் என்று ஏசிபி பாஹ்ரேன் தெரிவித்தார்.