கோலாலம்பூர், மே.07-
ஒரு வர்த்தகப் பெண்மணியான டத்தின் ஶ்ரீ பமேலா லிங் காணாமல் போனதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆ ணையமான எஸ்பிஆர்எம்மை குறைசொல்ல வேண்டாம் என்று அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி கேட்டுக் கொண்டுள்ளார்.
42 வயதுடைய அந்தப் பெண்மணி, விசாரணையில் ஆஜராவதற்காக புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு வந்து கொண்டிருந்த போது, காணாமல் போனதாகக் கூறப்பட்டாலும், அந்தச் சம்பவம் நிகழ்ந்து இருப்பது தங்கள் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டதாகும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி காணாமல் போன பமேலாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிக்க எஸ்பிஆர்எம் தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டுவது ஏற்புடையது அல்ல. காரணம், இப்படியொரு சம்பவம் நிகழ்வதற்கு முன்னதாக அந்தப் பெண்மணியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதற்கான எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை என்று அந்தத் தலைமை ஆணையர் விளக்கினார்.
எங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள் எஸ்பிஆர்எம்மை குற்றஞ்சாட்டுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று அஸாம் பாக்கி இன்று தெளிவுபடுத்தினார்.