செராஸ், மே.07-
லெபுராயா ஷா ஆலாம் நெடுஞ்சாலையான கெசாஸில் ஆர் & ஆர் ஓய்வுத் தளத்திற்கு அருகில் பெண் ஒருவர், வேனிலிருந்து தூக்கி எறியப்பட்டு, பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்ணின் கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் கெசாஸ் நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண், பேரா, ஈப்போ, மெங்லெம்லு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இது குறித்து போலீசார் தீவிரமாக ஆராய்ந்ததில் அந்தப் பெண்ணின் கணவர், நேற்று மாலை 6 மணியளவில் பூச்சோங், தாமான் கின்ராரா பகுதியில் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.
கணவன், மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடே அந்த நபர், தனது மனைவியை வேனிலிருந்து கீழே தள்ளியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பெட்டாலிங் ஜெயாவிலிருந்து தங்கள் வீட்டிற்கு வேனில் திரும்பிக் கொண்டு இருந்த போது, வேனுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது மனைவியை ஓடும் வேனியிலிருந்து கீழே தள்ளியதாக 50 வயது மதிக்கத்தக்க அந்த ற்ற் ஒப்புக் கொண்டுள்ளார் என்று ஏசிபி அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.
தங்களின் 20 ஆண்டு கால இல்லற வாழ்க்கையில் இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் தனது மனைவி, Methamphetamine வகை போதைப் பொருள் எடுக்கும் பழக்கம் கொண்டவர் என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார் என்று ஏசிபி அய்டில் போல்ஹாசான் மேலும் கூறினார்.