கோலாலம்பூர், மே.07-
அடுத்தாண்டு தோமஸ் கிண்ண பூப்பந்து போட்டிக்கு மலேசியா ஒரு முக்கிய போட்டியாளராக இருக்க வேண்டுமானால், ஒற்றையர் பிரிவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது அவசியம். தேசிய பூப்பந்து ஜாம்பவான் டத்தோ லீ சோங் வெய் அவ்வாறு கூறியுள்ளார். தோமஸ் கிண்ணம் போன்ற போட்டிகளில் வலிமை மிக முக்கியமான அம்சமாகும் என்றும், அதுவே தற்போது தேசிய அணியின் பலவீனமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரட்டையர் பிரிவில் அதிக சிக்கல்கள் இல்லை. பல திடமான ஜோடிகள் உள்ளனர். ஆனால் ஒற்றையர் பிரிவு இன்னும் போதுமான அளவு வலுவாக இல்லை. லீ ஜி ஜியாவை மட்டும் நம்பி இல்லாமல், குறைந்தது மூன்று தனிப்பட்ட வீரர்களாவது அணியில் இருக்க வேண்டும் என சோங் வெய் கூறினார்.
கடந்த வாரம் சீனாவின் ஜியாமெனில் நடந்த 2025 சுடிர்மான் கிண்ணப் போட்டியின் காலிறுதியில் வெளியேறிய பிறகு, மலேசியா மீண்டும் ஒருமுறை அணி போட்டியில் பட்டத்தை வெல்லத் தவறிவிட்டது.
இந்நிலையில் தோமஸ் கிண்ணப் போட்டிக்குத் தயாராவது மிக முக்கியம். யார் உடற்தகுதியுடன் இருப்பார்கள் அல்லது காயமடைவார்கள் என்பது தெரியாது என்பதால், ஒன்று அல்லது இரண்டு வீரர்களை மட்டும் அதிகம் நம்பியிருக்க முடியாது என்றாரவர்.
தோமஸ் கிண்ணம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் போட்டியாகும். அதன் தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதால், விரிவான திட்டங்களை வகுக்க கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம் என்று மலேசிய பூப்பந்து சங்கம் (BAM) மற்றும் பயிற்சி ஊழியர்களை சோங் வெய் வலியுறுத்தினார். மலேசியா ஐந்து முறை தோமஸ் கிண்ணத்தை வென்றுள்ளது.