புதுடெல்லி, மே.07-
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா இன்று அதிகாலையில் நடத்திய ‛‛ஆபரேஷன் சிந்துார்” எனும் அதிரடித் தாக்குதலில் முக்கியப் பங்காற்றியவர்கள் இரண்டு சிங்கப் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ மற்றும் விமானப்படை பெண் வீராங்கனைகளும் முக்கியப் பஙகாற்றியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 2 இந்தியப் பெண்கள் அளப்பரிய பங்களிப்பை வழங்கியிருப்பதை பாதுகாப்பு அமைச்சு இன்று நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
கர்னல் சோபிஃயா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிக்கா சிங் ஆகியோரே அந்த இரண்டு சிங்கப் பெண்கள் ஆவர்.
வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தலைமையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து, பயங்கரவாத முகாம்கள் மீது எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து கர்னல் சோபிஃயா குரேஷியும் விங் கமாண்டர் வியோமிக்கா சிங்கும் விளக்கினர்.
அவர்கள் தங்கள் பேட்டியில், 25 நிமிடங்களில் பாகிஸ்தான் மீது சிந்தூர் ஆப்ரேஷன் தாக்குதலைத் தாங்கள் வெற்றிகரமாக முடித்ததாகக் குறிப்பிட்டனர்.
9 பயங்கரவாத முகாம்கள் மீது 21 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. பொதுமக்கள் யாரும் பாதிக்காத வகையில் இந்த தாக்குதல் நடந்தது. ஆயுதங்கள் மிக கவனமாக கையாளப்பட்டன. பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை அவர்கள் மறு உறுதிப்படுத்தினர்.