புத்ராஜெயா, மே.08-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்குச் செல்லும் போது காணாமல் போனதாகக் கூறப்படும் ஒரு வர்த்தகப் பெண்மணியான 42 வயது பமேலா லிங்கிற்கு ஏற்கனவே எஸ்பிஆர்எம் பிடிவாரண்டைப் பிறப்பித்துள்ளது என்று அந்த ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
ஒரு வர்த்தகரான தனது கணவர் டத்தோ ஶ்ரீ ஹா திலிங் சியூ சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் வழக்கு விசாரணையை முழுமைப்படுத்துவதற்கு வாக்குமூலம் அளிக்க எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு வரும்படி பமேலா கேட்டுக் கொள்ளப்பட்டார்.
எனினும் விசாரணைக்கு ஆஜராக அந்தப் பெண்மணி தவறிவிட்டார். இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்வதற்கு புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு கைது வாரண்டு உத்தரவை எஸ்பிஆர்எம் பெற்றது.
இந்நிலையில் சிங்கப்பூர் லஞ்ச ஊழல் புலன் விசாரணை பிரிவின் உதவியுடன் அந்நாட்டில் அந்தப் பெண், கைது செய்யப்பட்டு, கடந்த ஜனவரி 5 ஆம் தேதி எஸ்பிஆர்எம் விசாரணையில் ஆஜராகுவதற்கு வகை செய்யப்பட்டதாக அந்த ஆணையம் இன்று விளக்கம் அளித்துள்ளது.