ஶ்ரீநகர், மே.08-
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளின் முகாம்களைத் தனது ஆப்பரேஷன் சிந்தூர் அதிரடி நடவடிக்கையின் மூலம் இந்தியா தரைமட்டமாக்கிய அடுத்த 24 மணி நேரத்தில் ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீர் எல்லைப்பகுதி அருகே நேற்று நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளது.
எல்லைப் பகுதியில் வாலாட்டிய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய ராணுவம், மறுபடியும் தகுந்த பதிலடி கொடுத்ததில் இந்தியாவிற்குள் ஊடுருவும் பாகிஸ்தான் முயற்சி தோல்விக் கண்டது.
நேற்று அதிகாலையில் இந்தியா நடத்திய அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து பதிலடித் தாக்குதலுக்கு தயாராகுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷாரிஃப் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் நேற்று நள்ளிரவு இந்த தாக்குதலை நடத்த முயற்சி செய்துள்ளது.
காஷ்மீர் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், சுற்றுலா பயணிகளை சுற்றி வளைத்து, 26 பேரை அவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக் கொன்றனர்.
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் அதிர்ச்சியையும், கோபத்தையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், பயங்கரவாதிகளை வளர்த்து விட்டு, இந்தியாவிற்குத் தொல்லை கொடுத்து வருவதாகக் கூறப்படும் பாகிஸ்தானை நேற்று அதிகாலை இந்தியா ஓங்கி அடித்து தண்டனை வழங்கியது.
‘ஆப்பரேஷன் சிந்துார்’ என்ற பெயர் சூட்டி, இந்திய ராணுவம் நடத்திய அதிகாலைத் தாக்குதலில், பாகிஸ்தானில் ஒன்பது பயங்கரவாதத் தளங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன.
எல்லைக் கோட்டைத் தாண்டாமல், ஏவுகணைகள், ட்ரோன்கள் வாயிலாக இந்தியா நடத்தி முடித்தத் துல்லியத் தாக்குதல், உலக நாடுகளை அசர வைத்துள்ளது.