கோலாலம்பூர், மே.08-
கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கெசாஸ் விரைவுச் சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்த வேனிலிருந்து தனது மனைவியைக் கீழே தள்ளிக் கொலை செய்ததாக நம்பப்படும் நபரை, விசாரணைக்கு ஏதுவாக 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.
50 வயது மதிக்கத்தக்க அந்த நபரை வரும் மே 10 ஆம் தேதி சனிக்கிழமை வரை தடுத்து வைப்பதற்கான அனுமதியை போலீசார் பெற்றுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா தெரிவித்தார்.
வேனுக்குள் கணவன், மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம் எழுந்த நிலையில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
கீழே விழுந்த தனது மனைவி என்னவானார் என்பதைக்கூட பார்க்காமல் அந்த நபர், வீட்டைச் சென்றடைந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.