கோலாலம்பூர், மே.08-
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும், அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷாம்சூல் அஸ்ரி அபு பாக்காரும் மடானி தட்ச் கியோஸ்க் சேவையை நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய பேரங்காடி மையமான பெட்டாலிங் ஜெயா, 1 உத்தாமா ஷோப்பிங் சென்டரில் தொடக்கி வைத்தனர்.
மடானி தட்ச் கியோஸ்க் சேவைத் திட்டம் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன் முதலில் தொடங்கப்பட்டதிலிருந்து இச்சேவை அறிமுகப்படுத்தப்படும் மூன்றாவது இடமாக 1 உத்தாமா பேரங்காடி மையம் விளங்குகிறது.
மடானி தட்ச் கியோஸ்க் சேவை என்பது 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முன்முயற்சித் திட்டமாகும். இது பல்வேறு டிஜிட்டல் கியோஸ்க்குகளை ஒன்றிணைத்து, மக்கள் அதிகளவில் திரளக்கூடிய வியூகம் நிறைந்த பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் துறைச் சேவைகளை வழங்குகிறது.
இது பொது மக்களுக்கான நீண்ட நேர சேவைக்குரிய செயல்பாட்டை கொண்டு இருப்பதால் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
அரசாங்கத் தலைமைச் செயலாளரின் சிந்தனையில் 2024 முதல் 2030 ஆம் ஆண்டுக்கான பொது சேவைத்துறை சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் கட்டமைப்பின் கீழ் ஒரு முன்முயற்சியாக மடானி தட்ச் கியோஸ்க் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
மக்களுக்கானச் சேவை வழங்கலை மேம்படுத்தவும், நாடு தழுவிய நிலையில் இலக்கவியல் டிஜிட்டல் தத்தெடுப்பு அணுகுமுறை மூலம் மக்களின் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த மடானி தட்ச் கியோஸ்க் சேவை பெரும் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மே 8 ஆம் தேதி முதல் பெட்டாலிங் ஜெயா, 1 உத்தாமா ஷோப்பிங் சென்டரில் மக்கள் இந்த மடானி தட்ச் கியோஸ்க் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
JPJ, MyDigital ID, EPF, Amanah Saham Nasional Berhad, Pos Malaysia மற்றும் அண்மையை TM Unifi ஆகியவற்றிலிருந்து 100க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்கும் 6 டிஜிட்டல் கியோஸ்க் வசதிகள் உள்ளன என்று அரசாங்கத் தலைமைச் செயலாாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.