ரவூப், மே.08-
பகாங் மாநிலத்தில் ரவூப் வட்டாரத்தில் அரசுக்குச் சொந்தமான நிலங்களில் அத்துமீறி நுழைந்து டுரியான் மரங்கள் நடவு செய்யப்பட்ட நிலப் பகுதிகளை மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா நேரடியாகப் பார்வையிட்டார்.
ரவூப், சுங்கை ருவான்- சுங்கை கிளாவ், மூன்றாவது மைல் பகுதியில் அமைந்துள்ள நிலப் பகுதியில் முன்பு, சட்டவிரோதமாக டுரியான் மரங்கள் நடவு செய்யப்பட்ட இடங்களைச் சுல்தான் பார்வையிட்டதுடன் அது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றார்.
மலைப்பாங்கான பகுதியில் போஃர் வீல் டிரைவ் வாகனத்தைச் சொந்தமாக ஓட்டிச் சென்று ஒவ்வொரு பகுதியையும் சுல்தான் மேற்பார்வையிட்டார்.
சுல்தானுடன் அவரின் புதல்வரான பட்டத்து இளவரசர் தெங்கு ஹஸ்சானால் இப்ராஹிம் அலாம் ஷா மற்றும் மாநில அதிகாரிகள் உடன் காணப்பட்டனர்.
அத்துமீறல் விவகாரத்தில் அமலாக்க அதிகாரிகள் பல்வேறு தடைகளை எதிர்நோக்கிய போதிலும் அமலாக்க நடவடிக்கைகளைத் தொடரவும், அவற்றை மேம்படுத்தவும் தொடர்ந்து உறுதி பூண்டிருக்குமாறு சுல்தான் கேட்டுக் கொண்டார்.