புத்ராஜெயா, மே.08-
பேரா, பாகான் டத்தோ துறைமுகத்தை அகலப்படுத்தும் திட்டம் தொடர்பாக ஒரு நிறுவனத்தின் பங்குதாரரை ஏமாற்றியதாகக் கூறப்படும் துறைமுக நிர்வாகியான ஒரு பெண்ணை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், நேற்று புத்ராஜெயா, எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பெண் இன்று காலையில் புத்ராஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, வரும் மே 11 ஆம் தேதி வரை 4 நாள் தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.
துறைமுகத்தை அகலப்படுத்தும் திட்டம் தொடர்பில் அந்த பெண் நிர்வாகி, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பங்குதாரரை நம்ப வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பெண்ணின் செயலால் பத்து லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.