கோலாலம்பூர், மே.08-
வர்த்தகப் பெண்மணி டத்தின் ஶ்ரீ பமேலா லிங் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் எட்டு பேர் மீது சந்தேகம் கொண்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி புத்ராஜெயாவில், எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் விசாரணைக்குச் செல்வதாக கூறிச் சென்ற 42 வயது பமேலா மர்மமான முறையில் காணாமல் போனார்.
அந்த வர்த்தகப் பெண்மணி கடத்தப்பட்டு இருக்கக்கூடும் என்று அஞ்சப்படும் வேளையில் இந்த கடத்தலில் எட்டு பேர் சம்பந்தப்பட்டு இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா தெரிவித்தார்.
பமேலா கடத்தலில் குறைந்தது ஐந்து வாகங்கள், ஐந்து ஓட்டுநர்கள் மற்றும் மூன்று தனிநபர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று போலீசார் சந்தேகிப்பதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.
பமேலாவைக் கடத்தியவர்கள் தங்களை போலீஸ்காரர்கள் என்று கூறி, ஆள்மாறாட்டம் செய்து இருக்கக்கூடும் என்று அவர் மேலும் கூறினார்.