புத்ராஜெயா, மே.08-
மலேசியாவில் பல்வேறு வேலை வாய்ப்புத் துறைகளில் ஒரு முதலாளியிடம் வேலை செய்வதிலிருந்து இன்னொரு முதலாளியிடம் மாறிக் கொள்வதற்கும், துறை விட்டு, இன்னொரு துறைக்குப் பணித் தன்மையை மாற்றிக் கொள்வதற்கும் அந்நியத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இன்று புத்ராஜெயாவில் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம்முடன் கூட்டாக இணைந்து நடத்திய அந்நியத் தொழிலாளர்களை நிர்வகிப்பது மீதான 13 ஆவது கூட்டுக் குழு கூட்டத்தில் தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, தங்கள் முதலாளிகளை மாற்றிக் கொள்வதற்கு ஒரே துறையில் வேலை செய்யும் அந்நியத் தொழிலாளகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
தற்போது தாங்கள் பணியாற்றும் துறைகள் மற்றும் முதலாளிகளை மாற்றிக் கொள்வதற்கு அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று சைபுஃடின் விளக்கினார்.
குறிப்பாக, அனைத்துலக நிறுவனங்கள் முன்மொழிந்துள்ள பரிந்துரை மற்றும் வளர்ச்சி கண்ட நாடுகளில் நடைமுறையில் இருக்கும் வேலை கோட்பாட்டு முறைக்கு ஏற்ப இம்முறைக்கு அனுமதி அ ளிக்கப்பட்டுள்ளதாக சைபுஃடின் விளக்கினார்.
இந்த நடைமுறையானது முதலாளிகளுக்கும், அந்நியத் தொழிலாளர்களுக்கும் நன்மை அளிக்க வல்லதாகும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.