மஞ்சோங், மே.09-
வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, கட்டட வரிசையில் உள்ள ஓர் உணவகத்திற்குள் நுழைந்ததில் உணவருந்திக் கொண்டு இருந்த வாடிக்கையாளர்களை மோதியது. இதில் ஒரு மூதாட்டி உயிரிழந்த வேளையில் இதர எழுவர் காயமுற்றனர்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 9.05 மணியளவில் பேரா, சித்தியவான் அருகில் ஒரு கேஃஎப்சி திடீர் உணவகத்தில் நிகழ்ந்தது.
தலையிலும், உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான அந்த மூதாட்டி, ஶ்ரீ மஞ்சோங் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் தனது இறுதி மூச்சை விட்டார் என்று மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
காயமுற்ற இதர எழுவர் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கேஃஎப்சி உணவகத்தின் எதிர்புறம் உள்ள சமிக்ஞை விளக்குப்பகுதியில் ஸ்யூவி ரகத்தைச் சேர்ந்த வோல்வோ XC90 வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் உணவகத்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி ஹஸ்புல்லா குறிப்பிட்டார்.