கோலாலம்பூர், மே.09-
மிகப் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் பிகேஆர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு அக்கட்சியின் தேசியத் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வி நூருல் இஸா அன்வார் போட்டியிடுகிறார்.
பிகேஆர் கட்சியின் இரண்டாவது உயரிய பதவியான துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயில், அப்பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
துணைத் தலைவர் பதவிக்கு, கட்சியின் உதவித் தலைவரான நூருல் இஸாவிற்கு வழிவிடும் வகையில் அப்பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்று சைபுஃடின் தெரிவித்துள்ளார்.
சைபுஃடினின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்று மே 9 ஆம் தேதியுடன் நிறைவுபெறவிருக்கும் பிகேஆர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில் தேசிய துணைத் தலைவர் பதவிக்கு அன்வாரின் மூத்த புதல்வியான நூருல் இஸா போட்டியிடுகிறார்.
தனது துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ள ரபிஃஸி ரம்லிக்கு, நூருல் இஸா கடும் போட்டியைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஸா போட்டியிடுவதற்கு சிலாங்கூர், சபா, ஜோகூர் உட்பட பல மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.