பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடு பாகிஸ்தான்: இந்தியாவுக்கு பென்டகன் முன்னாள் அதிகாரி ஆதரவு

வாஷிங்டன், மே.09-

பாகிஸ்தானைப் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடு என்று அமெரிக்கா முத்திரை குத்த வேண்டும் என்று பெண்டகன் முன்னாள் உயர் அதிகாரி மைக்கல் ரூபின் வலியுறுத்தியுள்ளார். லஷ்கர்-இ-தையிபா போன்ற அமைப்புகளை தனிப்பட்ட பயங்கரவாத அமைப்புகளாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது. ஆனால், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக பாகிஸ்தானை அறிவிக்கவில்லை.

தற்போதைய சூழலில், பாகிஸ்தானைப் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடாக அமெரிக்கா அறிவிக்க வேண்டும். மேலும், இந்தியாவுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும்.

பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த நாடு. ஒவ்வொரு முறையும் அரசாங்கம் தோல்வியைச் சந்திக்கும் போது, மக்களைத் திசைத் திருப்ப, சிறுபான்மையினர் மீது துப்பாக்கிகளைத் திருப்புகிறது. இதுதான் தோல்வியடைந்த அரசின் நாடகம். பயங்கரவாதிகளின் தாயகமாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது.

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க முடியாத சூழலில், மேற்கத்திய நாடுகளைப் பாகிஸ்தான் அதிகாரிகள் அறிவிலிகளாகப் பார்க்கின்றனர்.

தற்போது இந்தியா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏஎன்ஐ தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பென்டகன் முன்னாள் உயர் அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS