கோலாலம்பூர், மே.09-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு பொது மன்னிப்பு வழங்கும் விண்ணப்பத்திற்கு நாட்டில் உள்ள பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து இருப்பதாக ஆய்வு மையமான மெர்டேக்கா சென்டர் வழி தெரியவந்துள்ளது.
நாட்டை ஒன்பது ஆண்டுகள் வழிநடத்திய நஜீப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து பொது மன்னிப்புக் கோரி அவர் செய்து கொண்ட விண்ணப்பதிற்கு இந்திய சமூகத்தில் 60 க்கும் மேற்பட்ட விழுக்காட்டினர் தங்களின் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர் என்று தேர்தல் நிலவரங்களைத் துல்லியமாகக் கணிக்கும் மெர்டேக்கா சென்டர் கூறுகிறது.
அண்மையில் மலேசியர்களிடையே நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆய்வில் நஜீப் விவகாரத்தில் இந்தியர்களின் மனவோட்டம், தங்களின் ஆய்வில் பிரதிபலித்ததாக அது குறிப்பிட்டுள்ளது. இந்திய சமூகத்தில் 62.2 விழுக்காட்டினர், நஜீப்பிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில் நஜீப் விண்ணப்பத்திற்கு இஸ்லாமிய பூமிபுத்ராக்கள் 50.5 விழுக்காட்டினர் ஆதரிக்கின்றனர். மலாய்க்கார்கள் 43.0 விழுக்காட்டினரே இந்த விண்ணப்பத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
எனினும் சீன சமூகத்தில் நஜீப்பின் விண்ணப்பத்திற்கு கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. சீன சமூகத்தினர் 95 விழுக்காட்டினர் அந்த விண்ணப்பத்தை எதிர்க்கின்றனர்.
அதே போல் இஸ்லாம் அல்லாத பூமிபுத்ராக்களில் 51 விழுக்காட்டினர் அந்த விண்ணப்பதை எதிர்க்கின்றனர் என்று மெர்டேக்கா சென்டர் தெரிவித்துள்ளது.