ஆபரேஷன் சிந்தூர்: பெயரைக் கைப்பற்ற தயாரிப்பு நிறுவனங்கள் போட்டா போட்டி

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் கடந்த புதன்கிழமை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானைத் தாக்கியது. மொத்தம் 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாகத் தாக்கி அழித்ததாக ராணுவம் தெரிவித்தது.

இந்த தாக்குதலில் 30 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பஹல்காமில் கணவனை இழந்து குங்குமத்தை இழந்ததால் பெண்களின் இழப்புக்கு பழிவாங்கும் விதமாக இந்த ஆபரேஷனுக்கு சிந்தூர் என பெயரிடப்பட்டது.

இந்நிலையில் இந்த நடவடிக்கையை மையப்படுத்தி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் படம் எடுக்க பாலிவுட் தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். எனவே ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயருக்கு காப்புரிமை வாங்க தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

ராணுவப் பின்னணியில் படங்களைத் தயாரிக்கும் நார்த் மேக்கர்ஸ் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயருக்கு உரிமை கோரி உள்ளது.இருப்பினும், 15 விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்த பிறகு, இந்த பெயர் விரைவில் ஒருவருக்கு வழங்கப்படும். முன்னதாக இந்த பெயருக்கு அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் விண்ணப்பித்திருந்தது.

ஆனால் ராணுவ நடவடிக்கையையும் தேசபக்தியையும் வணிகமயமாக்குவதாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியானதால் தனது விண்ணப்பத்தை ரிலையன்ஸ் திரும்பப் பெற்றது.

WATCH OUR LATEST NEWS