அடுத்த ஆண்டுக்குள் பிரிமா சம்பந்தப்பட்ட எந்த நலிவடைந்தத் திட்டமும் இருக்காது- ங்கா கோர் மிங்

சிரம்பான், மே.09-

அடுத்த ஆண்டுக்குள் மலேசிய PR1MA ( பிரிமா ) கழகம் சம்பந்தப்பட்ட நலிவடைந்தத் திட்டங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு இலக்கு நிர்ணியத்துள்ளதாக அதன் அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

இதுவரை பிரிமா , 31 சுகாதாரத் திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. மேலும் மலாக்காவில் ரெசிடென்சி கிளேபாங் மற்றும் புக்கிட் காதீல், கெடா மாநிலத்தில் ரெசிடென்சி சிம்பாங் எம்பாட் 2 ஆகிய மூன்று திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

வீடு வாங்குபவர்களின் நலனை முடிந்தவரை சிறப்பாகக் கவனித்துக் கொள்வதற்காகக் கைவிடப்பட்ட அல்லது நலிவடைந்த திட்டங்களை முடிப்பதில் பிரிமா உறுதிபூண்டுள்ளதாக ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

இந்த முன்முயற்சியானது வீடு வாங்குபவர்களின் நலனைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து நலிவடைந்த திட்டங்களையும் முடிப்பதில் தாங்கள் கொண்டுள்ள கடப்பாட்டையும் பிரிமா மற்றும் மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் காட்டுகிறது என்று அமைச்சர் விளக்கினார்.

மேலும் எல்லா நிலைகளிலும் பொருத்தமானச் சூழலை உருவாக்குவதற்கு கூடுதல் மதிப்பாக, லேன்ஸ்கேப் நிலவடிவமைப்பு அமைத்தல், கால்பந்து மைதானங்கள் மற்றும் சூராவ் போன்ற மேம்பாடுகளை உள்ளடக்கிய திட்டங்களையும் பிரிமா தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது என்று ங்கா கோர் மிங் தெளிவுபடுத்தினார்.

இன்று நெகிரி செம்பிலான், ரந்தாவ், பண்டார் ஏகார் ரந்தாவில் வீடு வாங்கியவர்களுக்குச் சாவியை ஒப்படைக்கும் நிகழ்வில் ங்கா கோர் மிங் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நெகிரி செம்பிலான் மாநில வீடமைப்பு, ஊராட்சிமன்ற மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் J. அருள்குமாரும் கலந்து கொண்டார்.

WATCH OUR LATEST NEWS