நகைக்கடையில் துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை

ஈப்போ, மே.09-

துப்பாக்கி மற்றும் வெட்டுக்கத்தியை ஆயுதமாக ஏந்தியவாறு, நகைக்கடைக்குள் நுழைந்த 3 கொள்ளையர்கள், 3 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள நகைளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

இந்தச் சம்பவம், இன்று பிற்பகல் 1.25 மணியளவில் ஈப்போ, மெங்லெம்பு பகுதியில் உள்ள ஒரு பேரங்காடியில் நிகழ்ந்தது. இது குறித்து பொது மக்கள் கொடுத்தத் தகவலைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.

முகமூடி அணிந்த நிலையில் இந்த துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ள அந்த 3 கொள்ளையர்களும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

3 கொள்ளையர்களும் வெள்ளை நிற டொயோட்டா கேம்ரி காரில் தப்பிச் செல்வதற்கு முன்னதாக, ஒரு துப்பாக்கி மற்றும் ஒரு வெட்டுக்கத்தியைக் கொள்ளைக்குப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக ஏசிபி அபாங் ஸைனால் குறிப்பிட்டார்.

இக்கொள்ளைச் சம்பவத்தில், நகைக்கடைப் பணியாளர்கள் யாரும் காயம் அடையவில்லை. மூன்று கொள்ளையர்களுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS