அன்வாரின் குடும்பக் கட்சியாக மாறியதா பிகேஆர்? குற்றச்சாட்டை மறுத்தார் நூருல் இஸா

கோலாலம்பூர், மே.09-

தந்தை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பிகேஆர் கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில், கட்சித் தேர்தலில் மகள் நூருல் இஸா துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது மூலம் மக்களை முன்னிலைப்படுத்தி, ரெபோஃர்மாசி என்ற முழுக்கத்துடன் தொடங்கப்பட்ட அந்த நீதிக் கட்சி தற்போது குடும்ப கட்சியாக மாறிவிட்டதா? என்ற கேள்வி வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இன்று முடிவடைந்த பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கலில், பிரதமரும், பிகேஆர் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ள, வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதே வேளையில் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும், டத்தோஸ்ரீ அன்வாரின் மூத்தப் புதல்வியுமான 44 வயது நூருல் இஸா, கட்சியின் நடப்பு துணைத் தலைவர் ரபிஃஸி ரம்லியை எதிர்த்துப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

பிகேஆர் கட்சியின் முதல் நிலைப் பதவிக்கும், இரண்டாவது நிலைப் பதவிக்கும் தந்தையும், மகளும் வேட்புமனுத் தாக்கல் செய்து இருப்பது குறித்து பல்வேறு வியாக்கியானங்கழ்லும், விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், பிகேஆர் ஒரு குடும்ப கட்சி என்று கூறப்படும் குற்றச்சாட்டை நூருல் இஸா வன்மையாக மறுத்தார்.

பிகேஆர் குடும்பக்கட்சி என்று கூறப்படுவது, தங்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள காலாவதியானத் தாக்குதலாகும் என்றார்.

இது போன்ற குற்றச்சாட்டு எங்களுக்கு புதியது அல்ல. பிகேஆர் தொடங்கப்பட்டது முதல் முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டாகும் என்று நூருல் இஸா குறிப்பிட்டார்.

கடந்த 2010, 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கட்சியின் உதவித் தலைவர் பதவிக்குத் தாம் போட்டியிட்டு வெற்றி பெற்ற போது கூட, இதே போன்ற குற்றச்சாட்டைத்தான் முன்வைத்தார்கள் என்று இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின் போது டத்தோஸ்ரீ அன்வாரின் மூத்தப் புதல்வியான நூருல் இஸா மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS