கோலாலம்பூர், மே.10-
முறையான பயண ஆவணங்களின்றி இருக்கும் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக குடிநுழைவுத்துறை முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், இன்று அதிகாலையில் செர்டாங், ஸ்ரீ கெம்பாங்கானில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 33 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
அதிகாலை 12.45 மணிக்கு தொடங்கப்பட்ட இந்தச் சோதனையில் குடிநுழைவுத்துறையைச் சேர்ந்த 40 அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருந்தனர்.
மொத்தம் 73 அந்நியப் பிரஜைகளிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் செல்லத்தக்க எந்தவொரு பயண ஆவணமின்றி இருந்து வந்த 25 க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதுடைய 33 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த 33 பேரும் வங்காளதேசம், பாகிஸ்தான், மியன்மார் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று குடிநுழைவுத்துறை இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.