புக்கிட் மெர்தாஜாம், மே.10-
சாயம் மற்றும் ரசாயனக் கலவைச் சேமிப்புக் கிடங்கு ஒன்று தீப்பற்றிக் கொண்டதில் அந்த கிடங்கின் 70 விழுக்காட்டுப் பகுதி முற்றாக அழிந்தது.
இச்சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் புக்கிட் மெர்தாஜம், சிம்பாங் அம்பாட், ஜாலான் பெர்மாதாங் திங்கியில் நிகழ்ந்தது.
இத்தீ விபத்து தொடர்பாக பிற்பகல் 1.11 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாகவும் வீரர்களுடன் தீயணைப்பு வண்டிகள், அடுத்த 11 ஆவது நிமிடத்தில் சம்பவ இடத்தை அடைந்ததாகவும் தீயணைப்பு, மீட்புப் படையின் பினாங்கு மாநில இயக்குநர் முகமட் ஷோகி ஹம்ஸா தெரிவித்தார்.
எளிதில் தீப்பற்றிக் கொள்ளக்கூடிய அந்த ரசாயனக் கலவை, எங் லீ தோட்ட வளாகப் பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று தீப்பற்றிக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
ரசாயனக் கலவை என்பதால் தீ வேகமாகப் பரவியது. அதனைக் கட்டுப்படுத்துவதில் வீரர்கள் கடுமையாக போராட வேண்டியதாயிற்று என்று அவர் கூறினார்.