புக்கேட், மே.10-
தாய்லாந்தின் பிரதானச் சுற்றுலாத் தலமான புக்கேட் தீவிற்குச் சுற்றுலா சென்ற மலேசியர் ஒருவர், தாம் தங்கியிருந்த ஹோட்டல் கட்டடத்தின் மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலையில் நிகழ்ந்துள்ளது. 20 க்கும் மேற்பட்ட மலேசியர்களுடன் கடந்த வியாழக்கிழமை அந்த கடற்கரைத் தீவுக்குச் சென்றிருந்த அந்நபர், மறுநாள் காலையில் ஹோட்டல் கட்டடத்தின் கீழ் தளத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தலையில் பலத்த காயங்களுக்கு ஆளான அந்த நபர் இறந்து விட்டதை பாதோங் மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சம்பந்தப்பட்ட நபர் தன்னுடையை அறையில் மூன்று நண்பர்களுடன் தங்கியுள்ளார். அவர்களின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
அந்த மலேசியரின் உடலை, அவரது குடும்பத்தினர் இன்று காலையில் கோரியதாக தாய்லாந்து, சொங்க்லாவில் உள்ள மலேசியத் துணைத் தூதரம் உறுதிப்படுத்தியது.