எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்ற பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கான மாட்ரிகுலேஷன் இட வாய்ப்பை அரசாங்கம் ரத்து செய்துள்ளதா?

கோலாலம்பூர், மே.10-

2024 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்ற பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கான மாட்ரிகுலேஷன் இட வாய்ப்பை அரசாங்கம் ரத்து செய்து விட்டதாக கெராக்கான் கட்சி இன்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்ற பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு மாட்ரிகுலேஷன் இட வாய்ப்பு வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு அரசாங்கம் உத்தரவாதம் அளித்து இருந்தது.

ஆனால், 2024 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 10ஏ பெற்ற பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கான இட வாய்ப்பை வழங்கும் முடிவை அரசாங்கம் ரத்து செய்துள்ளதாக கெராக்கான் கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் டொமினிக் லாவ் ஹோ சாய் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த திடீர் முடிவு, பூமிபுத்ரா அல்லாத மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக டாக்டர் டொமினிக் லாவ் குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கம் தனது சொந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்பதையும் மக்களின் நம்பிக்கையை மதிக்கவில்லை என்பதையும் இது நிரூபித்துள்ளது என்றார் அவர்.

கடந்த ஆண்டு பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு ஓர் உத்தரவாதமாக அறிவிக்கப்பட்ட கொள்கை 10ஏ, இப்போது சந்தடியின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே பொறுப்பற்றச் செயல் மட்டுமல்ல, மக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்படும் ஒரு துரோகமாகும் என்று டாக்டர் டொமினிக் லாவ் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

10ஏ பெற்ற பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கான மாட்ரிகுலேஷன் இட வாய்ப்பு ரத்து செய்யப்பட்டதற்கு கல்வி அமைச்சர் பாஃட்லீனா சீடேக் மற்றும் துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ ஆகியோருக்குத் தெரியும் என்றால் அவர்கள் தங்கள் செயல்பாட்டை எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறார்கள் என்று டாக்டர் டொமினிக் லாவ் வினவினார்.

இது குறித்து இருவருமே நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS