வாஷிங்டன், மே.10-
இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று மாலையில் அறிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பில் இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் அமெரிக்க அரசு சார்பில் ஒரு நாள் இரவு முழுவதும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன என்பதை அறிவிக்கிறேன் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
தாக்குதல் துவங்கியது முதல் இரு நாடுகளும் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்து வந்தது. இந்நிலையில் போர் நிறுத்தம் செய்ய இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இவ்விவகாரத்தில் அறிவுப்பூர்வமாகச் செயல்பட்ட இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் அமெரிக்கா சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இன்று மாலையில் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து இந்தியாவும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும், போர் நிறுத்தம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதே போன்று பாகிஸ்தான் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார், வெளியிட்டுள்ள அறிக்கையில் போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தானும் உடன்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையைப் பாதிக்காத வகையில் இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக இந்தியாவுடன் போர் நிறுத்ததிற்கு பாகிஸ்தான் ஒப்புக் கொள்வதாக தனது அறிக்கையில் இஷாக் டார் தெரிவித்துள்ளார்.