தாவாவ், மே.11-
இந்த ஆண்டு ஆசியான் தலைவராக மலேசியா பொறுப்பேற்றுள்ள நிலையில், நாட்டின் அரசு ஊழியர்கள் உலக அரங்கில் தொழில்முறை தூதர்களாகச் செயல்பட வேண்டும் என்று அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷாம்சூல் அஸ்ரி அபு பாக்கார் தெரிவித்தார். திறமையான நிர்வாகம், பயனுள்ள தொடர்பு , மடானி மதிப்புகளை பிரதிபலிக்கும் பொது சேவைகளை வழங்குவதன் மூலம் நாட்டின் கண்ணியத்தை உயர்த்த அரசு ஊழியர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அரசு ஊழியர்கள் எதிர்வினையாற்றுபவர்களாக மட்டும் இருக்கக்கூடாது, மாறாக நிலையான கொள்கைகளை வகுப்பது, வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது, நாட்டின் பொருளாதாரத்தை பன்முகப்படுத்துவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்துவது ஆகியவற்றில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அரசு ஊழியர்கள் எப்போதும் நேர்மை விழுமியங்களுக்குக் கட்டுப்பட்டு, உயர் மட்ட பொறுப்புக் கூறலைக் கடைபிடிக்க வேண்டும். எந்தவோர் அதிகார முறைகேடலிலும் ஈடுபடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.