கோலாலம்பூர், மே.12-
ஜாலான் டூத்தா டோல் சாவடி அருகே மோட்டார் சைக்கிளை மோதிய நான்கு சக்கர வாகனத்தின் ஓட்டுநர் அந்த வாகனத்தின் உரிமையாளர் இல்லை என்று காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது என்று கோலாலம்பூர் போக்குவரத்துப் புலனாய்வு, செயலாக்கத் துறை தலைவர் உதவி ஆணையர் முகமட் ஸம்ஸூரி முகமட் ஈசா தெரிவித்தார்.
சந்தேக நபர் மீதான காவல் நீட்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேல் நடவடிக்கைக்காக துணை அரசு வழக்கறிஞரிடம் பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் கூறினார். விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த பெண் பயணி இன்னும் சுங்கை பூலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.