பெட்டாலிங் ஜெயா, மே.13-
குட்டி யானை இறந்தது தெரியாமல், எழுப்ப முயன்ற தாய் யானை, கண் கலங்கி நின்றதைத் தம்மை நெகிழ வைத்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த முகமட் அமீர் பைஃஸால் என்பவர் தனது முகநூலில் அந்த நூதன அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
கிழக்கு மேற்கு சாலையில் பேரா, கெரிக் அருகில் நேற்று திங்கட்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், தனது குட்டி யானை இறந்தது தெரியாமல் 12 மணி நேரத்திற்கும் மேலாக கண் கலங்கி நின்ற தாய் யானையின் பாசப் பேராட்டம், மலேசியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கிழக்கு, மேற்கு சாலையில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வதற்காக தாம் சென்றிருந்த வேளையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் லோரியின் முன்புறம் கடுமையாக சேதமுற்றதற்கு, தாய் யானை, லோரியைத் தாக்கி துவம்சம் செய்ததே முக்கியக் காரணமாகும் என்று அமீர் பைஃஸால் விவரித்தார.
உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த தனது குட்டி யானையை மீட்பதற்காக அந்த தாய் யானை, லோரியை நகர்த்துவதற்காக தனது தும்பிக்கையால் பலம் கொண்டு லோரியைத் தாக்கியது. ஆனால், அந்த கன ரக வாகனத்தை அதனால் நகர்த்த முடியவில்லை.
லோரியின் அடியில் சிக்கியுள்ள தனது குட்டி யானையை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்பதற்காக குட்டி யானையை விட்டு விலகாமல், தனது தும்பிக்கையைப் பயன்படுத்தி, லோரியை நகர்த்த தாய் யானை பல முறை முயற்சி செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
பின்னர் அவ்விடத்திற்கு வனவிலங்கு பூங்கா அதிகாரிகள் வந்த பின்னர், அந்த தாய் யானையைச் சாந்தப்படுத்துவதற்கு ஊசியைச் செலுத்தினர். அதற்கு முன்னதாக, அங்கு என்ன நடந்தது என்பது குறித்து தாய் யானைக்கு எதுவும் தெரியாமல் இருக்க அதன் காதுகளையும் கண்களையும் துணியால் மூடினர்.
யானையின் முகத்தைத் துணியால் கட்டும் போது, தனது குட்டி யானையைப் பிரிந்த துயரில் தாய் யானை அழுத சத்தம், தம்மால் இன்னமும் தெளிவாக கேட்க முடிந்ததாகவும், அந்த தாய் யானையின் பாசப் போராட்டத்தைத் தம்மால் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் தாமும் கண்கலங்கி நின்றதாகவும் அமீர் பைஃஸால் விவரித்தார்.