கோலாலம்பூர், மே.13-
கடந்த 2014 ஆம் ஆண்டில் ஜுலை 17 ஆம் தேதி, உக்ரேன் வான் போக்குவரத்துப் பாதையில் மலேசிய ஏர்லைன்ஸிற்குச் சொந்தமான எம்எச் 17 விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாவே பொறுப்பேற்க வேண்டும் என்று ஐ.நா. வான்போக்குவரத்து மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பயணிகளையும், விமானப் பணியாளர்களையும் உள்ளடக்கிய 298 பேர் கொல்லப்பட்ட இந்தச் சம்பவத்திற்கு ரஷியாவே காரணமாகும் என்று அந்த உலக மன்றம் தெரிவித்துள்ளது.
196 டச்சுப் பிரஜைகள், 38 ஆஸ்திரேலியப் பிரஜைகள் ஆகியோரை உள்ளடக்கிய இந்த விபத்துக்கு ரஷியாவே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்று ஐநா. அறிவித்துள்ளதாக நெதர்லாந்தும், ஆஸ்திரேலியாவும் வெளியிட்டுள்ள தனித்தனி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.
இந்தச் சம்பவத்திக் கொல்லப்பட்ட பயணிகளின் குடும்பத்தினருக்கு எத்தகைய இழப்பீடு வழங்குவது என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அந்த மன்றம் தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூரை நோக்கி வந்து கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸின் எம்எம் 17 விமானம், உக்ரேன் வான் போக்குவரத்துப் பாதையில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேரும் உயிரிழந்தனர்.