பெட்டாலிங் ஜெயா, மே.13-
வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் சீன வாக்காளர்களின் ஆதரவை பிகேஆர் கட்சியும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியும் இழக்கலாம் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி எச்சரித்துள்ளார்.
இதற்கு முன்பு பிகேஆர் கட்சிக்குத் தங்களின் வலுவான ஆதரவை வழங்கி வந்த சீனர்கள், தற்போது கட்சி மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் சீனர்கள், பிகேஆருக்கு வாக்களிக்க மாட்டார்கள். அதே வேளையில் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் தங்கள் வாக்குகளை செலுத்த மாட்டார்கள். இரு கட்சிகளுக்கும் வாக்களிப்பதை விட வீட்டில் வெறுமனே அமர்ந்திருப்பது மேல் என்ற மனோநிலைக்கு சீனர்கள் வந்து விட்டனர் என்று பொருளாதார அமைச்சருமான ரஃபிஸி ரம்லி தெரிவித்தார்.
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரஃபிஸி ரம்லி, நேற்றிரவு, கெடா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு, சீனர்களின் மனவோட்டத்தைப் பகிரங்கமாக அறிவித்தார்.
சீன வாக்காளர்களின் எண்ணிக்கை 32 விழுக்காட்டினராக உள்ளது. 16 ஆவது பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு அவர்கள் வெளியே வர மாட்டார்கள். சீனர்களின் இந்த நடவடிக்கை, பிகேஆருக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் மிகப் பெரியப் பின்னடைவை ஏற்படுத்தும்.
காரணம், பிகேஆர் கட்சியை ஆதரித்த மலாய்க்காரர்களின் எண்ணிக்கை 30 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே. பிகேஆர் கட்சி, இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு முழு ஆதரவை வழங்கியவர்கள் மலாய்க்காரர் அல்லாதவர்களே என்று ரஃபிஸி ரம்லி வெளிப்படையாக அறிவித்தார்.
இந்நிலையின் தன்னை ஆதரித்த வாக்காளர்களின் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் பக்காத்தான் ஹராப்பான் புரிந்து கொள்ள வேண்டும் என்று ரஃபிஸி ரம்லி கேட்டுக் கொண்டார்.