கோலாலம்பூர், மே.13-
கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர், ஜாலான் டூத்தா டோல் சாவடியில் தம்பதியரை மோதித் தள்ளிய விபத்தில் நவாரா வாகன ஓட்டுநருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 30 நாள் சிறைத் தண்டனை மற்றும் 12 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
32 வயது கே. தர்மராஜு என்ற அந்த வாகன ஓட்டுநர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் கைருனிசாக் ஹஸ்னி இத்தண்டனையை விதித்தார்.
தர்மராஜு பிடிபட்ட தினமாக மே 11 ஆம் தேதி முதல் தண்டனை அமலுக்கு வருவதாக மாஜிஸ்திரேட் தனது தீர்ப்பில் தெரிவித்தார். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 12 மாத சிறைத் தண்டனை விதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தர்மராஜுவின் வாகனமோட்டும் உரிமத்தை 5 ஆண்டுகள் ரத்து செய்வதாக கைருனிசாக் ஹஸ்னி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியர், நவாரா ரக வாகனத்தினால் மோதப்பட்டு கடும் காயங்களுக்கு ஆளாகியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.