கோலாலம்பூர், மே.13-
மலேசியப் பெண்ணுரிமை போராட்டவாதியும், இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணிப் படை போராளியும் சமூக சேவகரும், கல்வியாளருமான ராசம்மா பூபாலன், இன்று காலமானார். அவருக்கு வயது 98. அவரின் நல்லடக்கச் சடங்கு, கோலாலம்பூரில் உள்ள அவரின் இல்லத்தில் நாளை நடைபெறவிருக்கிறது.
1943-இல் நேதாஜி தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணிப் படையில் இணைந்து இரண்டாம் உலக யுத்தத்தில் பர்மா போரில் சேவை ஆற்றிய போது, விமான குண்டுத் தாக்குதலில் உயிர் பிழைந்தவர் மறைந்த ராசம்மா ஆவார்.
மிகச் சிறந்த கல்வியாளரான ராசம்மா, என்யுடிபி எனும் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கத்தைத் தொடங்கிய முன்னோடிகளில் ஒருவர் ஆவார்.
மலேசியக் கல்வித் துறையில் ஆண் ஆசிரியர்களுக்கும் பெண் ஆசிரியைகளுக்கும் ஊதியம் சமமாக இல்லை என்பது தொடர்பில் ஆசிரியர் சங்கங்களின் மூலமாக போராட்டம் நடத்தி ராசம்மா வெற்றி பெற்றார்.
யாழ்ப்பாணம் வம்சாவளியினரான ராசம்மா, கடந்த 1927 ஆம் ஆண்டு ஈப்போவில் சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார்.
1955-ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாற்றுத் துறையில் பட்டமும் பெற்றார். அப்போது மலாயாப் பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் இயங்கி வந்தது. பினாங்கு மெதடிஸ்ட் பள்ளியில் ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டார். ஆசிரியர் பணியில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து கோலாலம்பூர் மெதடிஸ்ட் ஆங்கிலப் பள்ளியின் தலைமை ஆசிரியையாகப் பதவி உயர்வு பெற்றார்.
சாரணியர் இயக்கத்திலும் அவர் தலைமைப் பொறுப்புகள் வகித்து இருக்கிறார். உலகின் ஏராளமான நாடுகளில் அவர் மலேசியாவைப் பிரதிநிதித்து இருக்கிறார். ராசம்மா, தம்முடைய 90 வயதிலும், அரச மலேசிய போதைப் பொருள் ஒழிப்பு சங்கத்தில் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.