தெலுக் இந்தான், மே.13-
அரச மலேசிய போலீஸ் படையின் கலகத் தடுப்புப் பிரிவான எப்ஃஆர்யூவின் எட்டு வீரர்கள், தெலுக் இந்தானில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு, அவர்களின் லோரியை மோதிய மணல் லோரியின் ஸ்டேரிங் செயல் இழந்ததே முக்கியக் காரணமாகும் என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று தெலுக் இந்தான், இந்து சபா முருகன் ஆலயத்தின் சித்திரா பெளர்ணமி திருவிழாவில் ரத ஊர்வலத்திற்குப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட 18 வீரர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை ஏற்றிக் கொண்டு அந்த எப்ஃஆர்யூ போலீஸ் லோரி, ஈப்போவிற்குத் திரும்பிக் கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.
காலை 8.51 மணியளவில் தெலுக் இந்தான், லங்காப், சுங்கை லம்பாம், சிம்பாங் தங்க்கி ஆயர் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் எட்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஸ்டேரிங் செயல் இழந்ததால் அந்த மணல் லோரி, போலீஸ் லோாரியை மோதி, குடைச் சாய செய்தது. இதில் போலீஸ் லோரியின் ஓட்டுநர் உட்பட 8 வீரர்கள் உயிரிழந்ததாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இதில் மேலும் ஆறு வீரர்கள் கடும் காயங்களுக்கு ஆளாகி தெலுக் இந்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதர நால்வர் சொற்ப காயங்களுக்கு ஆளாகியதாக அவர் குறிப்பிட்டார்.