அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக டாக்டர் இராமசாமி குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்

கோலாலம்பூர், மே.13-

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, நாளை புதன்கிழமை பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 23 ஆவது பிரிவின் கீழ் இராமசாமி மீது அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்படவிருக்கிறது என்று அவரின் வழக்கறிஞர் ஷாம்ஷேர் சிங் தின் தெரிவித்தார்.

அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பாக 76 வயதுடைய டாக்டர் இராமசாமி, நேற்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

இராமசாமிக்கு எதிரான குற்றச்சாட்டின் துல்லிய விவரங்களை எஸ்பிஆர்எம் வெளியிடவில்லை. கடந்த 2005 ஆம் ஆண்டு ஜசெக.வில் ஓர் உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்ட டாக்டர் இராமசாமி, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 3 தவணைக் காலத்திற்கு பினாங்கு துணை முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

தற்போது உரிமைக் கட்சியின் தேசியத் தலைவராக டாக்டர் இராமசாமி பொறுப்பில் இருக்கிறார். டாக்டர் இராமசாமி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வெளிநாட்டுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் பொறுப்பை வகித்த போது, பினாங்கு தைப்பூசத் தங்க ரதத்திற்குத் தங்கம் வாங்குவதில் டாக்டர் இராமசாமி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவரை எஸ்பிஆர்எம் விசாரணை செய்துள்ளது.

WATCH OUR LATEST NEWS