ஜார்ஜ்டவுன், மே.13-
நாளை புதன்கிழமை பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கும் பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி மீது அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பில் மொத்தம் 17 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் வட்டாரம் கூறுகிறது. 76 வயதுடைய டாக்டர் இராமசாமிக்கு எதிராகக் குற்றவியல் சட்டம் 409 ஆவது பிரிவின் கீழ் 17 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படும் என்று சட்டத்துறை அலுவலகத்தின் தகவல்கள் கூறுகின்றன.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் இராமசாமி மீது 17 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படவிருக்கின்றன.
இராமசாமிக்கு எதிரான 17 குற்றச்சாட்டுகளில் 13 குற்றச்சாட்டுகள், கடந்த 2019 ஆம் ஆண்டில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் வாங்கிய தங்க இரதம் சம்பந்தப்பட்டதாகும்.
அந்த அறப்பணி வாரியத்தின் தலைவர் பொறுப்பை இராமசாமி வகித்த போது, தங்க முலாம் பூசப்பட்ட இரதம் வாங்கப்பட்டதில் அவர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதர 4 நான்கு குற்றச்சாட்டுகள் அடுத்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி சம்பந்தப்பட்டதாகும். அவற்றில் இரண்டு, கல்வி உபகாரச் சம்பளம், மற்ற இரண்டு மருத்துவ நிதி வழங்கப்பட்டதாகும் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.