தொழிலாளர்கள் நலனில் மலேசியா பெரும் முன்னேற்றம் : அமைச்சர் ஸ்டீவன் சிம் பெருமிதம்

புத்ராஜெயா, மே.14-

மலேசியா கடந்த ஆண்டில் தொழிலாளர் நலன் மற்றும் தொழிலாளர் உரிமைகளை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

மலேசியாவில் வேலையின்மை விகிதம், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.1 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று ஸ்டீவன் சிம் சுட்டிக் காட்டினார்.

தென் கொரியாவின் ஜேஜு நகரில் நடைபெற்ற ஏபெக் எனப்படும் ஆசிய பசிபிப் பொருளாதார ஒத்துழைப்பின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர்கள் ஆய்வரங்கில் உரையாற்றுகையில் ஸ்டீவன் சிம் இதனைத் தெரிவித்தார்.

மலேசியாவின் குறைந்தபட்ச ஊதியத்தில் 13 விழுக்காடு அதிகரிப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு சலுகைகளில் 20 விழுக்காடு அதிகரிப்பு உள்ளிட்ட பல முக்கியச் சீர்திருத்தங்கள் குறித்து ஸ்டீவன் சிம் தமது உரையில் விவரித்தார்.

முன்பு மலேசிய மக்கள் மட்டுமே அனுபவித்து வந்த முழு சமூகப் பாதுகாப்புச் சலுகைகள் தற்போது வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் மலேசியா விரிவுபடுத்தியுள்ளது.

43 ஆண்டுகளுக்குப் பிறகு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் ILOC 155 ஷரத்தை சட்டமாக்கியுள்ளோம். தொழிற்சங்கங்கள் அமைப்பதில் முந்தைய கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளோம். மேலும் கல்வி மற்றும் பயிற்சி தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு 10 பில்லியன் ரிங்கிட் வரை ஒதுக்கியுள்ளோம் என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

வீட்டிலேயே வேலை செய்து வரும் இல்லத்தரசிகளுக்கு சமூகப் பாதுகாப்பு அனுகூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக, தொழிலாளர்களின் சராசரி ஊதியம் மூவாயிரம் ரிங்கிட் வரம்பைத் தாண்டியுள்ளது. இது மலேசியாவின் ஊதிய வளர்ச்சிக்கான ஒரு முக்கிய மைல் கல்லைக் குறிக்கிறது .

இவையாவும் மலேசியாவில் தொழிலாளர்கள நலன் சார்ந்த முக்கிய அம்சங்களைக் குறிக்கிறது என்று ஸ்டீவன் சிம் தமது உரையில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS