ஜோகூர் பாரு, ஏ.14-
கடந்த சனிக்கிழமை உடற்பயிற்சிக் கூடத்தில் ஸ்கின்ஹேட் இசைக் குழுவைச் சேர்ந்த பாடகர் ஒருவர் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார், 6 பேரைக் கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமையும், நேற்று செவ்வாய்க்கிழமையும் ஜோகூர் பாரு மற்றும் சிகமாட் முதலிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் 28 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அறுவரும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
கடுமையானத் தாக்குதலுக்கு ஆளான 23 வயதுடைய அந்த பாடகர், இச்சம்பவம் குறித்து இரண்டு தினங்களுக்கு முன்பு சிலாங்கூர், அம்பாங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இரும்பிலான குப்பைத் தோம்புகளைக் கொண்டு அவர் தாக்கப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
அந்த பாடகர் கலைநிகழ்ச்சியைப் படைத்துக் கொண்டு இருந்த போது இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.