ஏமாற்றுக் கும்பலைப் போலீசார் முறியடித்தனர்

புக்கிட் மெர்தாஜாம், மே.14-

டெலிகிராம் செயலி வாயிலாகப் பரிசுப் பொருட்கள் வழங்குவதாகப் பொய்யானப் பதிவேற்றத்தைச் செய்து மக்களை ஏமாற்றி வந்ததாக நம்பப்படும் கும்பல் ஒன்றை போலீசார் முறியடித்துள்ளனர்.

பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், அல்மாவில் உள்ள கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் ஒரு வீட்டில் செயல்பட்டு வந்த இந்த ஏமாற்றுக் கும்பல், நேற்று முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பினாங்கு மாநில வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்புடன் செபராங் பிறை தெஙா மாவட்ட போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் மோசடி செயலில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 6 நபர்கள் கைது செய்யப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்தார்.

18 க்கும் 28 க்கும் இடைப்பட்ட வயதுடைய உள்ளூரைச் சேர்ந்த 3 ஆண்கள், ஒரு பெண் கைது செய்யப்பட்ட வேளையில் அவர்களுடன் இருந்த அந்நிய நாட்டைச் சேர்ந்த 23 மற்றும் 38 வயதுடைய ஓர் ஆணும் பெண்ணும் பிடிபட்டதாக டத்தோ ஹம்ஸா குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS