ஈப்போ, மே.14-
தெலுக் இந்தானில் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்த கலகத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஒன்பது போலீஸ்காரர்களில் ஆகக் கடைசியாக சார்ஜன் எஸ். பெருமாளின் நல்லுடல் இன்று மாலை 5.45 மணியளவில் ஈப்போ, புந்தோங் மின்சுடலையில் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அதிகமானோர், ஈப்போ, பண்டார் பாரு, லாஹாட் மைன்ஸில் உள்ள பெருமாளின் இல்லத்தில் காலை 9 மணி முதல் திரளத் தொடங்கினர்.
பெருமாளின் பிரேதப் பெட்டிக்கு அருகில் பலர் மலர் வளையம் சாற்றி, இறுதி அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் 2.30 மணியளவில் நல்லடக்கச் சடங்கு அவரின் வீட்டில் தொடங்கியது.
மாலை 5 மணிக்கு புந்தோங் மின்சுடலைக்கு பெருமாளின் நல்லுடல் கொண்டு வரப்பட்ட போது, அங்குக் குழுமியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் துக்கத்தைத் தாங்கிக் கொள்ள இயலாமல் கண்ணீர் விட்டனர்.
நல்லடக்கச் சடங்கிற்குப் பிறகு அரச மலேசியப் போலீஸ் படையின் முழு மரியாதையுடன் பெருமாளில் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி மரியாதை செலுத்துவதற்கு ஈப்போ, சுங்கை செனாம் ஃஎப்ஆர்யூ பீராங்கிப் பிரிவின் உயர் அதிகாரி ஏஎஸ்பி எஸ். சிவகுமார் வந்திருந்தார். அவர், பெருமாளின் 68 வயது தந்தை கே. சுகுனநாதனிடம் ஜாலோர் கெமிலாங் கொடியை ஒப்படைத்தார்.
44 வயது பெருமாளும், இதர ஃஎப்ஆர்யூ போலீஸ்காரர்களும், கடந்த திங்கட்கிழமை தெலுக் இந்தானில் கொண்டாடப்பட்ட சித்திரா பெளர்ணமி திருவிழாவில் இரத ஊர்வலத்திற்குப் பாதுகாப்புப் பணிகளுக்கான கடமையாற்றி விட்டு, போலீஸ் லோரியில் ஈப்போவிற்குத் திரும்பிக் கொண்டு இருந்த போது இந்த கோர விபத்து நிகழ்ந்தது.
இதில் ஒன்பது போலீஸ்காரர்கள் உயிரிழந்த வேளையில் இதர ஒன்பது போலீஸ்காரர்கள் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.