பெட்டாலிங் ஜெயா, மே.15-
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு முதல் அரசாங்கத்தின் இனப் பிரச்சினைகளைக் கையாளுதல் வரை பல்வேறு காரணங்களால் நம்பிக்கைக் கூட்டணிக்கு சீன, இந்திய வாக்காளர்களின் ஆதரவு குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஊழலுக்கு எதிரான நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் நேர்மை குறித்த சந்தேகமும் தேசிய முன்னணியுடனான அரசியல் சமரசங்களும் இதற்கு காரணமாகக் கூறப்படுவதாக எம்ஃஎம்டி செய்தி வெளியிட்டுள்ளது.
பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லியின் உள்தரவு எச்சரிக்கையின்படி, 32 விழுக்காடு சீன வாக்காளர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம் என்றும், இந்திய வாக்காளர்கள் மத்தியில் அக்கூட்டணிக்கான ஆதரவு 38 விழுக்காடு சரிந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. வாழ்க்கைச் செலவு உயர்வும் பொருளாதார நிலைமை முன்பு இருந்ததைப் போலவே இருப்பதும் இச்சரிவுக்கு முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மானியங்களை முறைப்படுத்துதல், விற்பனை – சேவை வரி விரிவாக்கம் போன்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இந்த வாக்காளர்களை மேலும் கவலை அடையச் செய்துள்ளதாக எப்ஃஎம்டி குறிப்பிட்டுள்ளது.