புத்ராஜெயா, மே.15-
பொது மருத்துவர்களும் தனியார் நிபுணத்துவ கிளினிக் மருத்துவர்களும் துல்லித விவரங்கள் உள்ள கட்டண பில்லை நோயாளிகளுக்கு வெளியிட வேண்டும் என்பது கட்டாயமாகும். இம்மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வந்த மருந்து விலையைக் காட்சிக்கு வைக்க வேண்டும் என்ற உத்தரவின் வாயிலாக வெளிப்படைத் தன்மையைக் காட்டும் வகையில் அந்நடவடிக்கை அமையும் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தங்களின் சிகிச்சைக் கட்டண விவரங்களைத் தெரிந்து கொள்ள நோயாளிகளுக்கு உரிமை உண்டு. அது அவர்களுக்குத் துல்லிதமாகத் தெரியப்படுத்தப்படுவது அவசியம் என அமைச்சின் செயலாக்க மற்றும் மருந்தகத் திட்ட வளர்ச்சிப் பிரிவைச் சேர்ந்த முகமட் ரெட்ஸுவான் முகமட் ரிஸால் தெரிவித்தார்.
வழக்கமாக மருத்துவ ஆலோசனை, மருத்துகள் ஆகியவற்றுக்கு ஒன்றாகச் சேர்ந்து கட்டணம் வெளியிடப்படும். அதில் ஒவ்வொரு மருந்துக்கான விலை துல்லிதமாக இருக்காது. அந்நிலை இனி இருக்கக்கூடாது. மருத்துவ ஆலோசனை, ஒவ்வொரு மருந்தின் விலை என அனைத்து விவரங்களும் தெளிவாக உள்ள கட்டண பில் வெளியிடப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.