கோல லிப்பிஸ், மே.15-
ஆற்றில் நீர் நிரம்ப ஓடிக் கொண்டிருந்த நிலையில் மணல் நீரைச் சலித்து, தங்கப் படிமத்தைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த நபர் ஒருவர், நீரில் மூழ்கி மாண்டார்.
இந்தச் சம்பவம் நேற்று பகாங், கோல லிப்பிஸ், மெராப்போ, சுங்கை பெர்ஹாமா ஆற்றில் நிகழ்ந்தது.
தனது வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆற்றில், தங்கப் படிமத்தைத் தேடுவதற்கு காலை 10 மணிக்குப் புறப்பட்டதாக நம்பப்படும் 37 வயதுடைய அயூப் அஹ்மாட் என்ற கிராமவாசி இரவு 7 மணியைக் கடந்தும் வீடு திரும்பவில்லை.
அந்த நபரைத் தேடிக் கொண்டு, அவரின் சகோதரர், ஆற்றுப் பக்கம் சென்ற போது, ஆற்றின் கரையில் அவரின் உடமைகள் இருப்பதைக் கண்டு, சந்தேகித்தார். பின்னர் இது குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்ததாக லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் இஸ்மாயில் மான் தெரிவித்தார்.
உள்ளூர் மக்களின் உதவியுடன் தீயணைப்பு, மீட்புப் படையினர்,தேடுதல் பணியைத் தொடங்கிய போது இரவு 11.30 மணியளவில் அந்த நபரின் உடல் ஆற்றில் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்மாயில் மான் குறிப்பிட்டார்.