கோலாலம்பூர், மே.15-
மலேசியாவில் அடுத்து 5 முதல் 10 ஆண்டுகளில் பிரதமராக வரக்கூடிய ஆற்றல் வாய்ந்த குறைந்தது 10 அரசியல் தலைவர்களின் பெயர்களைப் பட்டியலிடுமாறு மக்களுக்கு மூத்த பத்திரிகையாளரும், நனிசிறந்த செய்தியாளருமான எ.காடீர் ஜாசீன் பரிந்துரை செய்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலை சாதகமாக இருந்தால், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மகள் நூருல் இஸா அன்வார் நாட்டின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும் என்று அண்மையில் தாம் எழுதிய ஒரு கட்டுரையைத் தொடர்ந்து காடீர் ஜாசீன் இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளார்.
எனினும் அன்வாரின் மகள் நூருல் இஸா, முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக்கின் புதல்வர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கைப் போல நாட்டின் பிரதமராக உச்ச நிலைக்கு வருவாரா? அல்லது முன்னாள் பிரதமர் துன் ஹுசேன் ஓனின் மகன் ஹிஷாமுடீனைப் போல பாதியிலேயே சிக்கிக் கொள்வாரா? என்பது காலம்தான் பதில் சொல்லும் என்று காடீர் ஜாசீன் குறிப்பிட்டுள்ளார்.