தெலுக் இந்தான், மே.15-
கடந்த செவ்வாய்க்கிழமை தெலுக் இந்தானில் நிகழ்ந்த கோர விபத்தில், கலகத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த ஒன்பது போலீஸ்காரர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த எப்ஃஆர்யூ போலீஸ் லோரியை மோதிய, கற்களை ஏற்றி வந்த லோரி நிறுவனத்தின் உரிமையாளர் விசாரணைக்கு அழைக்கப்படவிருக்கிறார்.
இந்த விபத்து தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்கு அந்த லோரி நிறுவனத்தின் உரிமையாளருக்கு அழைப்பானை அனுப்பட்டுள்ளதாக கீழ் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பக்ரி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.
இந்த விபத்துக்குக் காரணம் மனிதத் தவறா? அல்லது தொழில்நுட்பக் கோளாறா? என்பது உட்பட அனைத்து கோணங்களிலும் ஆராயப்படும் என்று டாக்டர் பக்ரி, இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் குறிப்பிட்டார்.